குர் ஆன் முதல் அத்தியாயம் – ஸுராஹ் பாத்திஹா –
பரிபூர்ண கருணையும் , நிகரற்ற அன்பும் கொண்டவனுமாகிய இறைவனின் திருநாமத்தால்
……….
எல்லாவித நன்றியும் இறைவன் ஒருவனுக்கே உரியது. (அவன்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன் ஆவான் .
அவன் பரிபூரண இரக்கமும் , நிகரற்ற அன்பும் கொண்டவன் .
(இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கு ஏற்றவாறு) வெகுமதி அல்லது தண்டனை அளிக்கப்படும் நாளுடைய அனைத்து அதிகாரமும் கொண்ட அதிபதி .
(எங்கள் இறைவனே) உன்னை மட்டுமே நாங்கள் வணங்கி (உன் கட்டளைக்கு) அடிபணிகிறோம். உன்னிடம் மட்டுமே உதவியை நாடுகிறோம்.
எங்களுக்கு (உன்னால் அருளப்பட்ட) நேர் வழியினை காண்பித்து (அதில் எங்களுக்கு மன திருப்தி கொடுத்து , அவ்வழியில் செயல் பட ஆர்வம் அளித்து அதில் நிலையாய் இருக்க) அருள் செய்வாயாக.
(அவ்வழி) எவர்களுக்கு அருள் புரிந்தாயோ (இந்த உலக வாழ்க்கை மற்றும் மறு உலக வாழ்க்கையின் வெற்றிக்கான சரியான சட்டங்கள் மற்றும் நனமை அளிக்க கூடிய நடை முறைகள் அளிக்கப்பட)வர்களின் வழி;
உன் கோபத்திற்கு ஆளானவர்கள் ( நேர் வழி கொடுக்கப்பட்டும் அதற்கு மாறாக செயல்பட்டவர்கள் அல்லது அவ்வழியை முழுமையாக ஏற்காமல் தங்களுடைய மன இச்சையின் அடிப்படையில் செயல்பட்டவர்கள் ) வழியும் அல்ல, வழி தவறியவர்களின் (கொடுக்கப்பட்டதை விட மிகைப்படுத்தி புனைந்து செயல்பட்டவர்களின் ) வழியும் அல்ல.