கண்களால் பார்க்க முடியாதவற்றின் மீது நம்பிக்கை
மறைவானவற்றின் மீது நம்பிக்கை என்பது கண்ணால் பார்க்க முடியாத பொருட்களை, விஷயங்களை வாதங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் காரணங்களை ஆதாரமாக வைத்து அறிவைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது ஆகும். இதை சுருக்கமாக பகுத்தறிவின் மூலம் உண்மையை அறிதல் என்றும் சொல்லலாம்.
இறைவனை நாம் கண்ணால் பார்க்க முடியாது. இறுதி தீர்ப்பு நாள் என்பதும் நம் கண் பார்வைக்கு தற்போது மறைவாக இருக்கிறது. ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபிகள் நாயகத்திற்கு வஹீ மூலம் இறைவனின் செய்தியை கொண்டு வந்தார்கள் என்பதும் எவரும் காணாத விஷயமாகும். ஆனால் இவைகளை நாம் உண்மை என்று நம்புகிறோம்.
ஏனெனில் நமக்கு உள்ளேயும், பூமி மற்றும் ஆகாயத்தில் உள்ள அத்தாட்சிகளும் , நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட குர் ஆனில் சொல்லப்பட்ட வலிவுமிக்க வாதங்களும் எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்றால் அறிவைக் கொண்டு யோசிக்கும் எந்த ஒரு அறிவு ஜீவியும் இதில் உண்மை இல்லை என்று கூற முடியாது.
இவ் உண்மைகளை அறிவை பயன்படுத்தி அறிகிறோமே தவிர கண்ணால் பார்த்து அல்ல. எந்த ஒரு பொருளை அல்லது விஷயத்தை கண்ணால் பார்க்க முடியாது ஆனால் அறிவைக் கொண்டு அறிய முடியுமோ , அப்படிப்பட்ட விஷயங்களை நான் என் கண்ணால் பார்த்து தான் நம்புவேன் என்பது ஒரு அறிவு இல்லாதவன் சொல்லும் வார்த்தைகள் ஆகும்.
மனிதனுக்கு அருளப்பட்ட கை , கால் அல்லது தோல் ( தொட்டு அறிவதற்காக), கண் (பார்த்து அறிவதற்காக), காது (கேட்டு அறிவதற்காக) , மூக்கு (வாசனை மூலமாக அறிதல்) , நாக்கு (சுவை மூலமாக அறிதல்) ஆகியவை உண்மை அறிதலுக்கான தகவல் அளிக்கும் கருவிகளாக செயல்படுகின்றன. ஆனால் தற்போதைய அறிவியல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பல உண்மைகள் மேற்கூறப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டிற்குள் வராத ஆனால் அறிவை அதற்குண்டான ஆற்றலின் சரியான பயன்பாட்டை கொண்டு அறியப்பட்டதாகும். குர் ஆனில் கூறப்பட்டுள்ள உண்மைகளை நாம் நம்புவதும் இந்த அடிப்படையில் தான். நாம் மேற்கூறப்பட்ட ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் ஆனால் அறிவிற்கு அப்பாற்பட்டதல்ல. நாம் அறிவு என்ற அளவைக் கொண்டு குர் ஆன் கூறுவதை எடை போட்டு பார்த்தோம். சிறிதளவும் குறை காண முடியவில்லை. ஆகவே குர் ஆன் கூறுவதை நம்முடைய கண்ணால் பார்க்காமல் உண்மை என நம்பினோம்.
குர் ஆன் கூறும் உண்மைகளை கண்களால் பார்த்த பிறகு தான் நம்புவோம் என்று கூறுவதில்லை மாறாக குர் ஆன் அளிக்கும் தெளிவான மற்றும் அறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் கூறப்பட்டவை உண்மை என்ற நம்புகிறோம்.